search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.சி.ஐ.டி. போலீஸ்"

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் இன்று விசாரணையை தொடங்கியுள்ளனர். #SterliteProtest #ThoothukudiShooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த 22-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்த பேரணியாக சென்றனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஏற்பட்ட வன்முறையில் போலீசார் துப்பாக்கிசூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் அமைதியாக போராட்டத்துக்கு திரண்டு சென்றவர்கள் மீது போலீசார் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், துணை தாசில்தார் உத்தரவிட்டு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதன் பின்னணி என்ன என்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்விகள் எழுப்பின.

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அரசு மருத்துவமனை பகுதி ஆகிய 3 இடங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இந்த‌ சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவிட்டார்.

    இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணையை இன்று தொடங்கினார்கள். இந்த விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் நேரடி மேற்பார்வையில் நெல்லை சி.பி.சி.ஐ.டி துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர்கள் நடத்துகின்றனர்.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்றே தூத்துக்குடி வந்தனர். தூத்துக்குடியில் இதற்காக பிரத்யேக அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு காட்சிகளை வைத்து விசாரணை தொடங்கியுள்ளார்கள்.



    மேலும் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 3 வழக்கு விபரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மூலமாக பெற்றனர்.

    துப்பாக்கி சூடு தொடர்பான வழக்கினை பதிவு செய்த போலீஸ் அதிகாரி, அதன் விசாரணை அதிகாரி, புகார் கொடுத்தவர்கள் மற்றும் துப்பாக்கி சூட்டிற்கு அனுமதிகொடுத்த அதிகாரிகள், துப்பாக்கி சூட்டின் போது பலியானவர்களின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் ஆகிய அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட உள்ளது.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தவுள்ளனர். பல்வேறு கட்டங்களாக இந்த விசாரணை நடைபெறவுள்ளது. துப்பாக்கி சூடு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை தொடங்கியிருப்பது மற்ற போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #SterliteProtest #ThoothukudiShooting
    ×